அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/26/16

Loud Speaker ..37 பங்களாதேஷ் பெண் சிங்கங்கள் :)

இன்றையஒலிபெருக்கியில் ....பங்களாதேஷ் மக்களும் லண்டன் காய்கறி அலாட்மெண்டும் , ,பக்கத்து வீட்டு வஹிதா பீவி ,...

காய்கறி அலாட்மெண்ட் தோட்டம் ..
--------------------------------------------------------------
இம்முறையில் 250 சதுர அடி அல்லது  20 மீட்டர் /10 மீட்டர் பரப்பளவு உள்ள நிலத்தில் (community gardens )காய்கறி வீட்டு தோட்டம் அமைத்தல்  ஆகும். இந்த நிலங்களை சொந்தமாக வாங்கி கொள்ளலாம் அல்லது மாதாமாதம் வாடகை கட்டி லீசுக்கும் எடுக்கலாம் ..சீனியர் சிட்டிசன்களுக்கு சலுகைகள் உண்டு ..ஒவ்வொரு மாதம் 30 பவுண்ட் கட்டவேண்டும் ..இங்கே நிறைய பேருக்கு வீட்டில் பெரிய அளவில் தோட்டம் இருந்தாலும் இப்படி அலாட்மெண்ட்டில் காய்கறி தோட்டமும் உண்டு .
அடுக்கு மாடிகளில் வசிப்போர் இப்படி அலாட்மெண்ட் வாங்கி வைத்துள்ளார்கள் .சில தோட்டங்களில் மேட்டுபாத்தி ,no dig கார்டன் எனும் raised bed தோட்டங்கள் மற்றும் வைக்கோல் தட்டு தோட்டம் என விதவிதமா இருக்கும் ..சம்மர் ஆரம்பிச்சா எல்லாரும் போய் விடுவார்கள் தங்கள் அலாட்மெண்ட்சுக்கு ..நம்ம நாட்டில் கல்கத்தாவில் இப்படி கம்யூனிட்டி தோட்டங்கள் இருக்கின்றன .

இங்கே பஞ்சாபியர் குஜராத்தியர் பங்களாதேஷ் பாகிஸ்தானியர் அதிகம் இருக்கும் பகுதிகளில் நம்ம நாட்டு காய்கறிகள் அதிகம் விளையும் தோட்டம் இருக்கும் .
லண்டனில் மக்கள் தொகை அதிகம் மேலும் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் எண்ணிக்கையும் அதிகம் ஆனாலும் அங்குள்ள வங்காளிகள் சின்ன இடம் கிடைத்தாலும் அதில் குறைந்தது 10 வகை காய்கறிகளை பால்கனி ஜன்னல் தொங்கும் தோட்டம் என வித விதமாக அமைத்து விடுவார்கள் ..இங்கே படத்தில் இருப்பது லண்டனில் உள்ள ஒரு பங்களாதேஷ் குடும்பத்தின் அலாட்மெண்ட் ..மேலும் படங்களுக்கு  சுட்டியில் வாசிக்கவும் 

குட்டியூண்டு இடத்தில பூசணி ,வெண்டை, பீர்கை, பாகல் ,புடலை, சுரைக்காய் ,கத்திரி ,கொத்த மல்லி ,முள்ளங்கி ,மேத்தி ,தண்டுக்கீரை ,கடுகு கீரை என பயிரிட்டு உள்ளார்கள் எல்லாமே இயற்கை முறையில் வளர்ந்தவை ..விதைகள் அவர்கள் நாட்டில் இருந்து தருவித்து மேலும் வீட்டு தேவைக்கு ஆசிய கடைகளில் வாங்குபவற்றில் இருந்து சேமித்த விதைகளை கிச்சன் ஜன்னலில் காய வைத்து அதே ஜன்னலில் குட்டி பெட்டிகளில் முளைக்க வைத்து நாற்றுக்கள் வளர்ந்ததும் வெளியில் தொட்டி மற்றும் பைகளில் நடுவார்கள்  ..இந்த அங்கக  தோட்டக்காரர்கள் அனைவருமே பெண்கள் தான் என்பது சிறப்பான விஷயம் . ..


இது அர்ஃ புல் நிசா என்பவரின்  தோட்டம் .பங்களாதேஷிலிருந்து முப்பது ஆண்டுக்களுக்கு முன்பு லண்டனில் குடியேறியவர் அலாட்மெண்ட் இல்லை இவருக்கு ஆனால் வீட்டின் பின்பக்கம் நாலு சுவர்களுக்கிடையிலுள்ள பகுதியை தோட்டமாக்கியுள்ளார் !


லண்டன் பகுதியில் தோட்டத்தில் வங்க  பெண் சிங்கங்கள் :)


இங்குள்ள ஆங்கிலேயரையே வியக்க வைத்துள்ளனர் இந்த  வங்க தேச பெண் சிங்கங்கள் :) ..ஒரு விஷயத்தை கண்டிப்பாக கூறியே ஆகவேண்டும் ..பங்களாதேஷ் மக்கள் மிகவும் அன்பானவர்கள் கடும் உழைப்பாளிகள் ..பெரும்பாலும் பஞ்சாபியர்  பாகிஸ்தானியர்கள் குஜராத்தியர்  ஆகியோர் இவர்களுடன் சேருவதில்லை நான்  பார்த்த வரையில் ..காரணம் மொழி மற்றும் சில பழக்கவழக்கங்கள் ..மூன்றாம் தலைமுறையினர் இப்போ முன்னேறி இருந்தாலும் பலருக்கு இன்னும் ஆங்கிலமே தெரியாது ...இன்னமும் நம்ம ஊரில்  இருக்குமே சங்கு மார்க் லுங்கி அணிந்து ரோட்டில் சர்வசாதரணமாக நடமாடும் ஆண்களை கண்கூடாக பார்த்திருக்கிறேன் பெண்களும் காட்டன் பிரிண்ட்  புடவை அணிந்தே கடும் குளிரிலும் செல்வார்கள் .இன்னும் அவர்கள் ஊரில் இருந்து கொண்டுவந்த  ரப்பர் பாட்டா காலணிகளையே அணிவார்கள் .சுருட்டு பிடிப்பார்கள் .மூக்குபொடி போடுவார்கள் ..


வஹிதா பீவி 
-----------------------
நாங்க இங்கிலாந்து வந்த புதிதில்  சுமார் 10 மாதங்கள் வேறு ஒரு வீட்டில் இருந்தோம் அது இரண்டு வீடுகள் ஒட்டி அமைந்த விக்டோரியன் அமைப்பு .பின் பக்கம் கதவு இருக்கும் கார்டன் கிச்சன் பக்கம் இருவரும் பார்த்துக்கொள்ளலாம் தோட்டம் இருவருக்கும் அருகில் இருக்கும் .அப்போது வந்த புதிதில் எனக்கு தோட்டம் அமைப்பதில் ஆர்வமில்லை ஜன்னல் வழியே பார்ப்பேன் ,வஹிதா பெரிய பானையில் தண்ணீர் கொதிக்க வைத்து அசைவ சமையல் செய்து கொண்டிருப்பார் நடு தோட்டத்தில் அடுப்பு க்ரில் அமைத்து இருப்பார் .விறகு கட்டை வைத்து நீர் கொதிக்கும் அதில் பலவகை அசைவ சமையல் நடக்கும் சம்மர் நேரத்தில் ..அவர் சமைச்சா அவ்வளவுதான் 
ஒரு நாள் முழுதும் மயக்கம்  வரும் !எனக்கு இந்த வாசனை விஷயத்தில் ஒரு பிரச்சினையுண்டு எந்த மணத்துக்கும் மயக்க மருந்து கொடுத்தாற்போல ஒரு உணர்வு வரும் எனக்கு .காரில் கூட ஸ்ப்ரே அடிக்க மாட்டார் கணவர் அதேபோல மெக்டானல்ட்ஸ் ப்ரெட் பர்கர் கியூடெக்ஸ்  வாசனை  பஜ்ஜி பொரிக்கும் வாசனை எதுவும் ஆகாது எனக்கு.

ஸ்ட்ராங்  சென்ட் மணத்துக்கும் அசைவ சமையல் காய்ந்த மீன் பொரித்தால் வரும் மணத்துக்கும் உமட்டலும் மயக்கமும் வரும் !மீன் மட்டுமில்லை சென்னான்குன்னி என்ற ஒரு வகை இறால் உண்டு அதையும்பொரிப்பார் .எங்க வீட்டு ஜன்னல் திறந்து வைக்கவே மாட்டேன் ஏனென்றால் காற்று வழியே அந்த வாசனை எங்க வீட்டுக்கு வந்துவிடும் .ஒருமுறை இவர் வீட்டு மணத்துக்கு ஒரு பிரிட்டிஷ் பெண்மணி பீப் வார்த்தையில் எங்க வீட்டை பார்த்து திட்டிக்கொண்டு சென்றார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் எப்படிப்பட்ட வாசனை என்று !..

நீங்க எல்லாரும் கம்மார் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி கொட்டை பாக்கை இடித்து பன்னீர் புகையிலை சேர்த்து சாப்பிடுவோரை மதுரைல பார்த்திருப்பீங்க தேனில  பார்த்திருப்பீங்க கோயம்பத்தூர்ல ,தர்மபுரில உளுந்தூர்பேட்டைல சிவகாசில ஏன் நம்ம சென்னைல கூட பார்த்திருப்பீங்க இங்கிலாந்தில் பார்த்திருப்பீங்களா (அப்படியே சிங்கம்  டயலாக் modulation இல் வாசிக்கவும் :))  ) நான் பார்த்திருக்கேன் இங்கே வெளிநாட்டில் .

இவர் வெற்றிலை குதப்புவதை பார்த்து மகள் என்னிடம் கேட்டா அம்மா அந்த ஆண்டி வாயில் இரத்தம் வருதே ஏனென்று ..!!..ஒரு நாள் இரவு நெருப்பு வட்டம் புள்ளியாய்  தெரியுது பயந்துட்டேன் ,,இவர் சுருட்டு பிடிசிக்கிட்டுருந்தார் இருட்டில் :)..வஹிதா முறம்/சுளகு  போல இருக்குமே ஓவல் ஷேப்பில் அதில் எல்லா பொருளையும் வைத்து கால நீட்டி பாய்விரித்து அதில் அமர்ந்து புகையிலை சாப்பிடுவார் ..நீண்ட தோட்டத்தில் தண்டுக்கீரை முளைக்கீரை ரன்னர் பீன்ஸ் உருளை எல்லாம் போட்டு வளர்த்தார் நாள் முழுதும் தோட்டத்திலேயே இருப்பார் ..ஏர்பூட்டி உழாத குறைதான் !..அவ்வப்போது ரஜினி ஸ்டைலில் இரண்டு விரல்களை வாயில் வைத்து வெற்றிலையை துப்புவார் !! அரிவாளேல்லாம் நான்  சென்னைல கூட படத்தில் தான் பார்த்திருக்கேன் இவர் தோட்டத்தில் மூன்று வச்சிருப்பார் ... ..!!....

ஒரு நாள் அவர் வீட்டில் யாருமில்லை ஒரு ரெஜிஸ்டர் போஸ்டை தபால்காரர் என்னிடம் தந்தார் ..நான் அவர் வந்ததும் கதவை தட்டி தபாலை நீட்டினேன் ..அவரது மொழியில் எதோ சொன்னார் ..எனக்கு விளங்கவில்லை அவர் மகள் சொன்னாள் //அம்மா உங்களுக்கு எதோ தரணுமாம் கொஞ்சம் இருங்க //கிச்சனுக்கு ஓடியவர் ரெண்டு முட்டைகளை கொண்டு வந்து தந்தார் என் கையில் ..அவர் மகள் சொன்னார் வீட்டில் தின்பண்டம் எதுவுமில்லை அதனால் அம்மா முட்டை தருகிறார்.எங்கள் வழக்கம் ஏதாவது கொடுப்போம் வீட்டுக்கு வந்தவருக்கு என்றாள்  !!..நல்லவேளை முட்டையுடன் நிறுத்தினாரே என்று நினைத்துக்கொண்டேன் ..அந்த ப்ரிட்ஜில் முழு மீன் இருந்தா என் நிலை என்னாயிருக்கும் !!!

இவர் பங்களாதேஷ் நாட்டு பெரிய ஆற்று மீன்களை வாங்கி பின்னாடியே தோட்டத்தில் காயவைத்து கருவாடாக்கி சமைப்பார் !அதை பொரிச்சா எங்க ஏரியாவுக்கே கருவாட்டுகடை மணம் அடிக்கும் ஒவ்வொருநேரம் எனக்கு மயக்கமே வரும் ..அந்த நாற்றத்துக்கு எங்க வீட்ல ஊதுபத்தியா கொளுத்தி வைப்பேன் அந்த ரெண்டு வாசத்துக்கும் சேர்ந்து  மயக்கமே வரும்  அப்படியும் என்னமோ எங்க வீட்ல சமைச்ச மாதிரியே இருக்கும் .எங்க வீட்டு loft இற்கும் பக்கத்துக்கு வீட்டு loft attic இற்க்கும் இடையில் உள்ள துவாரம்  வழியே அவங்க வீட்டு சமையல் மணம் எங்களுக்கு வரும் .இதில் அடிக்கடி எனக்கு தட்டு நிறைத்து உணவும் கொடுப்பார் பத்திரமா வாங்கி குப்பையில் கொட்டிடுவேன் ..கணவர் கிண்டல் செய்வார் //நீங்க என்ன கிறிஸ்டியன் அன்போடு கொடுத்தா சாப்பிடணும் ஆஹா ஓஹோன்னு ..எப்படி நான்  சாப்பிடுவேன் ..எல்லாமே அசைவம் அதுவும் கட்லா /ரோஹு/ மிருகால் போன்ற மீன்கள் அளவில் 60 செண்டிமீட்டர் நீளமும் தடித்தும் இருக்கும் நான் கிச்சனில் ஜன்னல் வழியே பார்ப்பேன் தோட்டத்தில் துவைக்கும் கல் போல ஸ்லாப்ஸ் மேலே வச்சி அப்படியே பெரிய கத்தியால் வெட்டுவார் வகிதா 1சில நேரம் கருப்பு நிறத்தில் கெண்டை மீன்கள்அல்லது நண்டுகள்  உயிருடன் துள்ளிக்கொண்டு இருக்கும் வாளியில்  .

வஹிதாவுக்கு ஒரு மகள் ஒரு மகன் .மகன் வேலைக்கு போவார்.அவருக்கும் ஆங்கிலம் தடுமாற்றம்தான்  .மகள் கல்லூரி படித்துகொண்டிருந்தார் .ஒரு நாள் மாலை 7 மணி இருக்கும் இந்த வஹிதா வீட்டு கிச்சனில் சமையல் செய்து கொண்டிருந்து பாதியில் கொத்தமல்லி பறிக்க தோட்டத்துக்கு போன சமயம் மகள் மறந்து  கதவை சாத்திவிட்டு வெளியே சென்றுவிட்டாள் .வஹிதா கதவை தட்டி பார்த்திருக்கு கதவு லாக் ஆகியிருக்கவும்  பயத்தில் தரையில் உக்கார்ந்து ஓவென்று அழுகிறார் பத்து நிமிடமாக அன்று  என் கணவரும் வீட்டில் இருந்தார் ..அப்பவும் அதற்கு பேச தெரியல !பேட்டி ,பேட்டா என்று மட்டும் சொல்லிகொண்டே தரையில்  விழுந்து புரள்கிறார் !ஒரு குப்பை வாளியை எடுத்து ஏறி வீட்டில் நுழைய சைகையால் சொன்னார் பார்த்தால் உள்ளே சமையல் கியாஸ் அடுப்பு எரிவது கண்ணாடி வழியே தெரியுது !.. ஜன்னலின் மேற்பக்கம் ஒரு சிறு அளவு மேல் நோக்கி  திறந்து இருந்தது அதனுள்ளே கொஞ்சம் மெலிந்த தேகவாகு இருப்போர் நுழையலாம் நான் என் கணவரை உள்ளே நுழைய சொன்னேன் ..இவருக்கு பயம் வேறு குருட்டாம்போக்கில் எப்படி ..வீட்டுக்குள் நுழைவதென்று  திருடன் யாராவது இருந்தால் அல்லது இவரையே திருடன் என்று வெளியே சென்ற மகள் நினைத்து அடித்தால் என்னாவதென்று !அவர் பயம் அவருக்கு ஆனால என் பயம் அந்த வீடு எரிந்தாலோ கியாஸ் லைன் வெடித்தாலோ எங்க வீடும் பாதிக்கப்படும் ஒருவாறு அவரை  மிரட்டி :)ஏற வைத்துவிட்டேன் ! பாதி உடம்பு நுழைந்ததும் இவர் ரிவர்ஸ் இல் காலை உதைத்து திரும்பினார் /ஐயோ நான் மாட்டேன்  சமையலறையை கண்ணாலும் காண முடியலை அவ்ளோ அழுக்கும் குப்பையும் நிறைந்திருக்கு என்று திரும்ப பார்த்தார் !ஆனாலும் நான்  சைகையால்  மிரட்டி உள்ளே தள்ளிவிடாத குறையாய் அனுப்பி விட்டேன்..இறங்கியவர் அந்த அடுப்பை அணைத்து உள்புறம் தாளை நீக்கி கதவின் வழியே வெளியே வந்தார் ..அந்த வஹிதா சந்தோஷத்தில் செய்வதறியாமல் என் கணவர் காலில் தொபுக்கடீர்னு விழுந்து பிடித்து நன்றி சொன்னார் .fire என்ற வார்த்தை கூட சொல்ல தெரியலையேன்னு வருத்தமாக இருந்தது எனக்கு .முக்கியமான விஷயம் அன்று ஜன்னல் வழியே உள்ளே போய் வந்த என் கணவர் இரண்டு வாரத்துக்கு கிரி படத்தில் அடிவாங்கிய  வடிவேலு மாதிரியே இருந்தார் :))) சமையல் அறையில் சுண்டெலிகள் ஓடினவாம் ..அவ்வளவு அழுக்கும் குப்பையுமாம் எண்ணெய்  பிசுக்கில் வழுக்கி எழும்பினாராம் .ஐந்து நிமிடத்தில் மீண்டும் பின் கதவை தட்டினார் ..திறந்தால் கையில்  ஒரு தட்டில் நாலு ப்ளெயின் பராத்தாஸ் இருக்கு !வேகவேகமா சுட்டு எனக்கு கொண்டுவந்திருக்கார் வஹிதா !!.அன்று அந்த பராத்தாஸ் நான்  சாப்பிட்டேன் !!..

படத்தில் இருப்பது மகளும் மூன்றாவது வீட்டு சிறுவனும் ..பக்கவாட்டில் நிற்கிறாரே அவர்தான்  வஹிதா ..இது 2007 இல் எடுத்த படம் :)) சுமார் ஒரு வருடம் அந்த வீட்டில் இருந்தோம் பிறகு இந்த வீட்டை வாங்கி  மாறி வந்தபின்னும் நடு இரவில் பல நாட்கள் கனவில் அந்த குழம்பு மணம் வந்ததென்றால் பார்த்துகொள்ளுங்கள் எந்தளவு நான்  மனரீதியா பாதிக்கப்பட்டு இருப்பேன் :)..
பதிவு கொஞ்சம் பெரிதாகிவிட்டது :))மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம் ...
அன்புடன் ஏஞ்சல் ..
========================================================================2/22/16

Loud Speaker ...36 ..மியாவ் ஸ்பெஷல் :)

மியாவ் ஸ்பெஷல் :) 
====================


22 .02 .2016 திங்களன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்பின் பூனைக்கு :)
எனக்கும் பூனைகளுக்குமான நேசம் பாசம் பந்தம் எல்லாம் எனது 3 வயது முதலே துவங்கியது என்றால் மிகையில்லை :)
எங்கள் வீட்டில் நாங்கள்  வளர்த்த முதல் பூனை rufus ..எனது மெத்தை எனது பொம்மைகள் நான் பால் குடிக்கும் பாட்டில் என என்னுடைய பொருட்களை மட்டுமே பொறாமையுடன் எடுத்து செல்லும் கள்ளப்பூனை அது !
அதற்குபிறகு பல பூனைகள் எங்கள் வீட்டில் எங்களோடு வளர்ந்தார்கள் ..ஆகவே எனக்கு நாயகர்களை விட பூனைகள் மீது ஸ்பெஷல் தனிப்பட்ட அன்புண்டு :)
உங்களை முதன்முதலில் ஜலீலா அவர்களின் பதிவில்தான் சில பின்னூட்டங்களில் பார்த்தேன் !
அந்த ஏரியாவையே அதகளபடுத்தி இருப்பீர்கள் !விழுந்து புரண்டு சிரித்து இருக்கிறேன் அப்போதெல்லாம் என்ன ஒரு அட்டகாசம் ! இடி நிலநடுக்கம் வந்தாற்போல இருக்கும் !
ஒருவேளை குண்டு பூனை எடைதான் காரணமோ என்றும் நினைத்திருக்கிறேன் ..
இன்னொன்று கட்டாயம் சொல்லியாக வேண்டும் !நீங்கள் உங்கள் முகத்தை காட்டியிருந்தாலும் எனக்கு எப்பவும் நீங்கள் குண்டு பூனைதான் :) என் மகள் கூட உங்களை cat ஆன்ட்டி என்றுதான் சொல்லுவாள் :)

எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு மட்டுமில்லை நம் நட்புக்கள் குறிப்பாக ப்ரியா ,இலியாஸ் மஹி ஜெய் நேசன் ,அப்துல் காதர் ,வானதி அனைவருக்குமே இந்த சந்தேகம் உண்டு !
உங்கள் உண்மையான வயது 16 என்கிறீர்கள் ஆனால் 2011 முதல் எப்படி அதே 16 இல் இருக்க முடியும் ! ஆகவே 2016 இல் உங்கள் 61 வது மன்னிக்கவும் :) உங்கள் 21 ஆவது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடும் உங்களுக்கு என்ன பரிசு கொடுப்பது என்று இன்னும் குழப்பத்தில் இருப்பதாலும் மேலும் உங்களுக்கு எங்கள் அனைவரின் கடல் போன்ற அன்பு இருப்பதாலும் பரிசுகளை நீங்க விரும்ப மாட்டீர்கள் என்பதாலும் எதையும் உங்களுக்கு பரிசாக தரவில்லை :)
ஆனால் 10 வேக வைத்த முட்டைகளை மட்டும் அன்போடு அளிக்கிறேன் பெற்றுகொள்ளவும் .


இதேபோல எப்பொழுதும் சந்தோஷமாக அனைவரையும் சிரிக்கவைத்து அந்த நீங்க சந்தோஷத்திலேயே இரண்டு மடங்கு வெயிட் ஏறி இதேபோல பல 21 ஆம் பிரண்ட சே சே :)  டங் ஸ்லிப் பிறந்த  நாட்களை கொண்டாட  வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் :)
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அதிரா மியாவ் !

என் பக்கம் ப்ளாக் ஓனர் அதிரா மியாவ் 

அன்புடன் வாழ்த்துவோர் மீ ஏஞ்சல்  மற்றும் நட்பூக்கள் அனைவரும் :)

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜூன் 2015
-----------------
ஒரு புது விசிட்டர் ..ஒரு வாரமா கிச்சனுக்கும் தோட்டத்துக்கும் நடுவில் வந்து எதையோ எதிர்பார்த்து என்னை பார்ப்பார்..ஒரு நாள் மூணாவது வீட்டு குட்டி பூஸ் ரெண்டுபேரை கூட்டிக்கிட்டு வரான் smile emoticonhomeward bound படம் தான் நினைவு வருது எனக்கு smile emoticon 
என்னடா பசிக்குதான்னு கேட்டேன் ..பாவமா இருந்தான் உடம்பெல்லாம் காயம் ..இப்போ டெய்லி நான்தான் சாப்பாடு கொடுக்கறேன் .சாப்பிட்டு போறான் ...ஹோம்லஸ் பூனை பாவம் ..கிட்டு என்று பெயர் வச்சிருக்கேன்2015 டிசம்பர் இறுதியில் 
-----------------------------------------


எங்கிருந்தோ வந்தான் !!
என்னவென்று சொல்வேன் எப்படி சொல்வேன்  சந்தோஷத்தில் திக்குமுக்காடிட்டேன் !!
சில மாதங்கள் முன்பு ஒரு ஹோம்லஸ் பூனை உடம்பெல்லாம் புண்களுடன் எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து உணவு சாப்பிட்டு போவான் கிட்டு என்று பேர் கூட அவனுக்கு வச்சேன் நினைவிருக்கா  அவன் ஹோம்லஸ் இல்லை யாரோ வளர்க்கும் பூனைதான் ஆனா எங்க ஏரியா தாதா பூனைகள் அவனை கடிச்சி புண் ஆக்கியிருக்குங்க ..
கடந்த 2 மாதங்களாக அவன் வீட்டுப்பக்கம் வரவேயில்லை ..
மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சி ..என் கணவர் சொன்னார் அவனது ஓனர்ஸ் வீடு மாறியிருப்பாங்க இவனையும் கூட கூட்டிட்டு போயிருப்பாங்கன்னு ..போனில் அவன் போட்டோஸ் எல்லாம் போன வாரம் தான் டிலீட் செஞ்சேன் ..நேற்று இரவு 9:30 இருக்கும் மெல்லிய குரலில் மி மி என்று ஒரு சத்தம் கேட்டது கிச்சனில் இருந்தேன் அப்போது கிட்டு எப்பவும் சத்தம் போடாம மெதுவா தான் கூப்பிடும் ..கர்ட்டனை விலக்கினா எதோ வெள்ளையா பஞ்சு மூட்டை போல தெரிஞ்சது ..நான் அப்பகூட நினைக்கலை இவனாக இருக்கும்னு ..கதவை திறந்து பார்க்கிறேன் !!என்னை நோக்கி அந்த பஞ்சு மூட்டை வரவும் எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியலை !! அவனுக்கு சந்தோசம் என்னை பார்த்ததும் !!காலை சுற்றி சுற்றி வரான் இப்போ முன்பைவிட இன்னும் வெயிட் போட்டு இருக்கான் .
உணவு கொடுத்தேன் சாப்பிட்டு கொஞ்ச நேரம் இருந்து விட்டு போய் விட்டான்  வரவே மாட்டான் பார்க்கவே மாட்டோம் என்று நினைச்சிட்டிருந்தேன் என்னை தேடி வந்திடுச்சே அந்த மியாவ் 
எனக்கு அவனை பார்த்ததில் சந்தோஷமா இல்லை அவனுக்கு என்னை பார்த்ததில் சந்தோஷமான்னு எனக்கே அளவிட முடியவில்லை
அன்பு என்பது யாதெனில் காணாமல் போனாலும் நம்மை தேடி வருவதே ஆகும் :)) 
----------------------------------------------------------------------------------------------------------------------------------

மனதுக்கு இதமளிக்கும் ஒரு செய்தி 
---------------------------------------------------------------

நேற்று இந்த செய்தியை sky நியூசில் காண்பித்தார்கள் !

இராக் மற்றும் சிரியா  நாட்டு நிலைமை அனைவரும் அறிந்ததே ..அங்கிருந்து உயிரை பிடித்து கடினமான சூழல்களை கடந்து எப்படியாவது ஐரோப்பாவிற்க்கோ அல்லது அமெரிக்க நாடுகளுக்கோ தப்பி கடல்மார்க்கமாக பயணிக்கிறார்கள் பலர் ..இதில் பலர் உயிரை விடுவதும் மனதை வருத்தும் பல செய்திகள் படித்திருக்கிறேன் ..
அப்படி இராக்கிலிருந்து தாயும் ஐந்து பிள்ளைகளும் அவர்களின் வளர்ப்பு பூனையுடன் துருக்கி வழியாக கிரீஸ் நாட்டு தீவிற்கு  ரப்பர் படகில் பயணித்து உள்ளார்கள் ரப்பர் படகில் நிறைய மக்கள் கூட்டத்தில் நீரில் பயணம் !என்னால் நினைத்து பார்க்கவே முடியவில்லை !எவ்வளவு ஆபத்தான பிரயாணம் :( அதிலும் இவர்கள் தங்கள் அன்பு பூனையையும் படகில் அணைத்தவாறு செல்லும்போது இயல்பாகவே பூனைகளுக்கு ஒரு பயம் வரும் அந்த பயத்தில் குதித்து ஓடிவிட்டது அப்பூனை ..அவர்கள் அங்கேயே சில நாட்கள் இப்பூனையை தேடியும் கண்டுபிடிக்க மீண்டும் இயலா நிலையில் அழுகையுடன் அக்குடும்பம் ஐரோப்பாவை (பெர்லின் )நோக்கி சென்றுள்ளது ஆனால் அப்பூனை அங்கேயே தீவில் இவர்களை தேடி கொண்டு அலைந்திருக்கு அந்த ஏரியா தாதாக்கள் வேறு (பிற பூனைகள் ) இதை ராகிங் செய்து மிரட்டியுள்ளன !.அப்போ அந்த பகுதியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சார்ந்த ஆஷ்லி என்பவர் அதை தத்தெடுத்து வாக்சின் போட்டு உணவளித்து dias என பெயர் சூட்டி பாதுகாத்துள்ளார் .அங்குள்ளோரை விசாரிக்கவும் அவர்கள் இப்பூனை குடும்பம் பெர்லின் பயணித்ததை சொல்லவும் பெர்லினுக்கு அனுப்பியுள்ளார் பூனையை பிறகு ஒரு போஸ்டர் ஆன்லைன் மூலம் மற்றும் அச்சிட்டு அகதிகள் முகாமில் உள்ளவர்களை அடையும் வண்ணம் இப்படி விளம்பரப்படுத்தி இருக்கின்றார் !


என்ன ஒரு அற்புதம் ஆச்சர்யம் அப்பூனை யின் உரிமையாளர்கள் நோர்வே நாட்டை  தஞ்சமடைந்தது கேள்விப்பட்டு 480 ஐரோக்கள் செலவு செய்து அக்குடும்பத்துடன் சேர்த்துள்ளார்கள் ..பெர்லினில் இப்பூனை ஒருவர் வீட்டில் கொஞ்சம் நாட்கள் இருந்தது அவர்களுக்கு  மிக ஆசையாம் dias மீது அதன் உரிமையாளர்கள் கண்டுபிடிக்க முடியா பட்சத்தில் அவர்களே இதை வளர்க்கவும் முன்வந்தனராம் !

பெர்லின் ஏர்போர்ட்டில் dias


dias எனும் குன்குஷ் என்ற செல்ல பூனையுடன் சேர்ந்த குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீருடன் !

அன்பு என்பது அனைவருக்கும் உரித்தானது என்பது உண்மையே 1
உண்மையான அன்பு எப்படியாவது உரிமையாளர்களுடன் இணைத்து வைக்கும்.
==================================
மற்றொரு பதிவில் சந்திப்போம் ..2/14/16

Loud Speaker ..35


இன்றைய ஒலிபெருக்கியில் ..காத்து வாங்கலையோ காத்து !!,மீள்சுழற்சி  மற்றும் க்வில்லிங் ,பாதையோர கோடீஸ்வரர்கள் ,மிதுன் சாய்    நிறைய சந்தோஷம் ,கொஞ்சம் கோபம் .

காத்து வாங்கலையோ காத்து :)
--------------------------------------------------------

காசை கரியாக்குவதை கேள்விபட்டிருப்போம் !இங்கே இங்கிலாந்தில் லியோ டி வாட்ஸ் என்ற 27 வயது தொழிலதிபர் ! காற்றை ஜாடியில் அடைத்து சீனாவுக்கு விற்று 16,000 பவுண்டுகள் சம்பாதிச்சிருக்கார் !


ஷாங்காய் பெய்ஜிங் போன்ற சீனாவின் பல பகுதிகளில் மிக மோசமான மாசு சூழ்ந்ததால் அங்குள்ளோர் சுவாசிக்க தூய்மையான காற்று இன்றி தவிக்கிறாங்க இவர் காற்று பிசினஸ் ஆரம்பிச்ச வேகத்தில் ஒரு சில வாரங்களில் 200 காற்று நிரப்பிய 580 மிலி கண்ணாடி குடுவைகள் விற்று தீர்ந்தனவாம் ! தனது குடும்பத்தினர் நண்பர்கள் அனைவரையும் லியோ காற்று பிடிக்க கிராமப்புறம் மலைபகுதிகளுக்கு மாசில்லா இடங்கள தேர்வு செய்து அனுப்பி வலையால் காற்றை பிடித்து ஜாடியில் அடைத்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறாராம் ! 

காற்று புடிக்கிறாங்க பாருங்க :)


காற்றின் விலை ஒரு மேசன் ஜாடி ..£80..இந்திய மதிப்பில் ரூபாய் 7906.34 ....
இந்த பிசினஸ் நல்லா இருக்கும் போலிருக்கே :)  இந்தியாவில் உள்ளவங்க விரைவில் முயற்சிக்கலாம் குறிப்பா சுத்தமான பொல்யூஷன் இல்லா மலைவாழ்விடங்கள் கிராமபுறங்களில் உள்ளோர் :)
இந்த காற்றை சைனாகாரங்க திறந்து முகர்கிராங்கலாம் ஒரு முறைதான் .
சிலர் அதை souvenir போலவும் பத்திரமா வைத்துகொள்கின்றார்களாம் !
காற்று பிடிப்பதை இந்த காணொளியில் பாருங்க :)காற்று சுத்தமான ஆர்கானிக் காற்று என்பதில் மிக கவனமா இருக்காங்க இந்த காற்று பிடிக்கும் க்ரூப் .ஜாடியில் சிறு பூச்சிகள் புல் துண்டுகள் அடையாம கவனமா இருக்காங்க .சீனத்து பேராசை பிடித்த மக்கள்  மண்ணை மிளகாக்கி ,இரசாயன மருந்துகளில் உணவுபொருளை முக்கி எடுத்து சோயாவில் கலர் சேர்த்து பட்டாணியாக்கி பல  தில்லாலங்கடி வேலை செய்தது மட்டுமன்றி   :( பிளாஸ்டிக் அரிசி அதிக  இனிப்பும் செயற்கை பொருளும் கான்சர் காரணிகளும்  சேர்த்த கொய்யா மிட்டாய்,பிளாஸ்டிக் காய்கறிகள் ,பில்டிங் கட்டும்போது மழை வராம  மழையை தடுக்க இரசாயன குடை என கணக்கிலடங்கா   போலிகள் போலிகள் ! என இவங்க அக்கிரமங்களுக்கு அளவேயில்லை .இப்போ சுத்தமான காற்றை ஆன்லைனில் வாங்குவது காலத்தின் கோலம் :( 

----------------------------------------------------------------------------------------------------------
பாதையோர கோடீஸ்வரர்கள்
-------------------------------------------
நடைமேடையிலிருந்து விழா மேடை வரை - நெகிழ வைத்த சிறுவர்கள்
செல்வம் இருப்பவர்களைவிட இல்லாதோரிடம் நிறைய அன்பு கருணை தாரள குணங்கள் இருக்கும் என்பதற்கு இவர்கள் சாட்சி ..

------------------------------------------------------------------------------------------------------------

மிதுன் சாய் 
----------------

மதுக்குளம் திருவள்ளுவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் .பசுமை இந்தியாவை உருவாக்க ஆர்வமுடன் இருக்கிறான் 
இச்சிறுவன் .சென்ற தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கவில்லையாம் மிதுன் .
காரணம் காற்று சூழல் மாசு அடையும் பட்டாசு புகையால் என்பதற்காக  .
ரெயில்வே ட்ராக் அருகில் 7 மரங்களை நட்டு பராமரித்து வருகிறான் இச்சிறுவன் .வீட்டிலும் நிறைய மரங்களை நட்டு பராமரிக்கிறான் .
இவனைபற்றி சுட்டி விகடனில் செய்தி வந்து அதை இவனது தாய் எங்களுக்கு பசுமைவிடியலில் தெரிவித்தார் .வாழ்த்துக்கள் சாய் மிதுன் .இப்படிப்பட்ட பிள்ளைகளை ஊக்குவிக்கும் இவனது பெற்றோருக்கும் பாராட்டுக்கள் 
---------------------------------------------------------------------------------------------------------

மீள்சுழற்சி  மற்றும் க்வில்லிங்
------------------------------------------------------

ஒரு சிறிய கண்ணாடி குடுவை ஆலயத்தில் இருந்தது !அதன் வாய் பகுதி மற்றும் கழுத்து பகுதி வெடித்து விழும் நிலையில் ..அதை வீசுவதற்கு வைத்திருந்தாங்க எனக்கு அதை வீச மனம் வரல்லை :)
வீட்டுக்கு கொண்டு வந்து ஆங்காங்கே double sided sticky tape ஒட்டி உரித்து அதில் சணல் சுற்றி கொஞ்சம் க்வில்லிங்கும் செய்து விட்டேன் :)                                                                                 


சந்தோஷம் 
---------------------
முகபுத்தகத்தில் பசுமைவிடியலில் பல விழிப்புணர்வு வீட்டு தோட்டம் என பல்சுவை பதிவுகளை பகிர்கிறோம் ..அதுவும் தோட்டம் சம்பந்தமா பல விஷயங்களை பகிரும்போதும் அதைபற்றிய சந்தேகங்களை அங்கு நிறைபேர் கேட்டு பதில் கூறும்போதும் ஆத்ம திருப்தி எனக்கு ..சமீபத்தில் மாடிதோட்ட கலப்பின விதைகள் பற்றிய விழிப்புணர்வு பதிவு அதிகமானோரை அடைந்தது ..அதேபோல சகோதரர் செல்வா அவர்களின் கொய்யா மிட்டாய் பதிவு பற்றிய விரிவான தகவல்களை பகிர்ந்தோம் பலரை திகைக்க வைத்தது ..
மிக்க  சந்தோஷமா இருந்தது ..

கோபம் 
-----------
ஒரு நல்ல விஷயத்தை கஷ்டப்பட்டு பகிர்வோம் அதற்கு views அதிகபட்சம் 1500 -3000 இருக்கும் .
ஆனா ஒரு திரைப்பட நடிகர் மாடித் தோட்டத்தில்  காய்கறிகளுடன் இருக்கும் படத்தை ஷேர் செய்யும்போது அதுக்கு கமெண்ட்சும் (25) ஷேர்ஸ் ஆயிரக்கணக்கில் .views 35000 எனும்போது எரிச்சலும் வேதனையுமே மிஞ்சுகிறது அதேபோல கெயில் திட்டம் பற்றி நடிகர் அர்ஜுன் படம் போட்ட மீம்ஸ் 900 லைக்ஸ் வாங்கிச்சி ....மனிதன் இன்னும் திரைப்பட ரீல் பெட்டியில் இருந்து வெளிவரவில்லையே :( 
வீட்டுதோட்டத்துக்கும்  நடிகர்களை வைத்து ப்ரொமோட் செய்தாதான் செய்தி மக்களை சென்றடையும் எனும் பொது மக்களின் மனநிலையை என்ன சொல்வது  :( 

இது நியாயமான கோபம்தானே !
------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் ஒரு புதிய பதிவில் சந்திப்போம் 

2/11/16

Loud Speaker ....34

இன்றைய ஒலிபெருக்கியில் கேரளா  மாணவ விவசாயி நந்து ,
எங்க வீட்டு மீனாட்சி, சிறகவரை சதுரபயிர் தோரன் ,மஞ்சள் ,மாங்கா இஞ்சி ஊறுகாய் ....

மாணவ விவசாயி நந்து ,
----------------------------------


கேரளா ..நெடுமங்காடு கரிப்பூரில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் .
படிக்கும் காலத்தில் நமக்கு பரீட்சை இருந்தால் மட்டுமே அதிகபட்சம் காலை 5 மணிக்கு விழிப்போம் .ஆனால் நந்துவுக்கு அதிகாலை சூரியன் உதிக்குமுன் 4:30 மணிக்கே நாள் துவங்குகிறது .ஒரு விவசாயியின் மகனான அருணைஅக்கம் பக்கத்தினர்  நந்து ,விவசாயி தோட்டக்காரன்  என்றே செல்லபெயரிட்டு அழைக்கின்றனர் .
நந்துவின் சிறிய வீட்டின் ஒரு பக்கத்தில் பச்சை பசேலன  மேல்கூரையை நோக்கி பரந்து விரிந்த செடிகொடிகள்  கீழே நாற்றுபைகளில் பல்வேறு வகையான சின்னஞ்சிறு நாற்று செடிகள் என கண்கொள்ளா காட்சியாக உள்ளது ..அருகில் நன்கு செழிப்புடன் வளர்ந்த வாழைமரங்கள் அடைந்த பழுத்த குலைகளோடு காட்சி தருகின்றன .மேலும் தோட்டத்தில் வருடமுழுதும் விளையும் நித்யவழுதன Clove bean என்ற பீன்ஸ் வகையும் பூக்களுடன் காட்சி தருகின்றது  ..இந்த வகை பீன்ஸ் இப்போதெல்லாம் காண்பது அரிது .மேலும் வளரி பயிர் சிறகு அவரை எனும் சதுரபயிர், விதவிதமான மிளகாய் வகைகள் மற்றும் கோவைக்காய் பூசணி  போன்ற படர்கொடிவகைகளும் வளர்ந்துள்ளன .

தன வீட்டு தோட்ட விளைச்சலை அண்டை அயலாருக்கு விற்று அதன் மூலம் வரும் பணத்தை பள்ளி படிப்புக்கு தேவையான பொருட்களை வாங்கவும் வீட்டின் கொல்லைபுறத்தில் ஆட்டுப்பட்டி அமைக்க சுய உதவிகுழுவிடம் இருந்து பெற்ற கடனை அடைக்கவும் பயன்படுத்துகிறான் நந்து !!
வீட்டு தோட்ட காய்கறிகளை சுமார் எவ்வளவுக்கு விற்பனை செய்கிறார்  என்று வினவியபோது 
25 ரூபாய்க்கு 1 கிலோ சிறகு அவரை விற்பேன் என்கிறார்...(இன்று நான்  200 கிராம் 3:50 பவுண்டு கொடுத்து வாங்கினேன் இங்குள்ள ஆசிய கடையில் ) !! ..வெளிநாட்டில் வருடந்தோறும் வெயில் மட்டும் இருந்தால் எல்லா இடத்திலும் இந்த 25 ரூபாய்க்கு சிறகு அவரை இங்கும் சாத்தியமே !!

இவரது பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் அல்போன்சா கூருகிறார்  பல நேரங்களில் நந்து காய்கறிகளை இலவசமாகவே தந்து விடுவாராம் ! இவரிடம் விளையும் அத்தனை  இயற்கை முறையில் நச்சு உரமின்றி பூச்சி மருந்தின்றி விளைவதால் அனைவருக்கும் நந்துவின் தோட்ட விளைச்சல் மிக விருப்பமாம் !
இயற்கை வேளாண்மையில் சாதிக்க செடிகொடிகளை வளர்க்க இவருக்கு உதவுவது இவர் தோட்டத்தின் 5 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சிறிய எண்ணிக்கையில் உள்ள வாத்துக்கள் வான்கோழிகள் ஆடு முயல் மற்றும் கோழிகள் போன்ற உயிரினங்கள் இவையெழுப்பும் ..பல்வேறு கலவையான ஒலிகள்  தோட்டத்தில் இருந்து காற்றில் பரவி காதுகளை அடையும் .மேலும் செங்கலாலான மீன் தொட்டி ஒன்றும் அதில் கப்பி கெளுத்தி மற்றும் ஒருசில வகை மீன்களும் வளர்க்கின்றார் .இந்த தொட்டியின் நீரும் செடிகளுக்கு பயன்படுத்துகிறார் .மீன் தொட்டியின் நீர் சிறந்த உரமாகிறது ,ஆடு முயல்களின் கழிவுகளையும் உரம் தயாரிக்கிறோம் என்கிறார் நந்துவின் இளைய சகோதரி அனிலா .இவர் தோட்ட செடிகளையும் விலங்குகளையும் பராமரிக்க நந்துவுக்கு உதவி செய்கிறார் .
தேர்ந்த விவசாயிகளுக்கே இயற்கை பாரபட்சம் செயும்போது இவர்களை விட்டுவைக்குமா என்ன !
கால்வாய் மற்றும் குளங்கள் போன்றவற்றில் வறட்சியால்  நீர் குறைவதால் இவர்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டு சில செடிகள் காய்ந்துவிட்டனவாம் கடந்த ஆண்டு பாகல் தக்காளி கத்திரி என அமோக விளைச்சல் ஆனால்  இவ்வருடம் குறைவு என்று வருத்ததுடன் கூறுகிறார்கள் அணிலாவும் நந்துவும் .வறட்சி மட்டுமின்றி பலத்த காற்று மற்றும் அருகிலுள்ள இஸ்ரோ வளாகத்துக்கு வரும் குரங்குகளும் இந்த தோட்டங்களை  விட்டு வைப்பதில்லை ஆகவே வாழைக்குலைகளை சாக்கு பையினால் சுற்றி கட்டி வைத்துள்ளார்கள் ! பழங்களை முன்னோர்களிடமிருந்து காப்பாற்ற !!.. ஹ்ம்ம் காடுகள் என்று இருந்தால் மனிதனால் அவை ஆக்கிரமிக்கப்படாதிருந்தால்  !குரங்கினங்கள் அங்கிருக்கும் இப்படி நகரத்துக்கு உணவு தேடி வீட்டை நாடி வராதே :( ..
எத்தனை குறைகளிருந்தாலும் அடுத்த ஓணம் பண்டிகைக்கு இப்போதே தங்கள் வீட்டு தேவைக்கு பீன்ஸ் பயிரிட்டுவிட்டார்கள் இந்த மாணவ ஒருங்கிணைந்த பண்ணை விவசாயிகள் !..
 மாணவ பருவத்திலேயே இயற்கையை நேசித்து நஞ்சில்லா காய்கறிகளை வீட்டுதோட்டத்தில் பயிரிடும் இவர்கள் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்களே !!

தகவல் மற்றும் படம்  இந்தியன் எக்ஸ்ப்ரஸ் கொச்சின் .

========================================================================
கீதா அவர்களின் தனியொருவன் பதிவு பார்த்ததும் எனக்கு எங்க வீட்டு மீனு என்ற மீனாட்சி நினைவுக்கு வந்தாள் ..ரொம்ப வருஷம் முன்பு நடந்தது ..அப்பா அப்போ அருப்புகோட்டை பக்கம் வேலை செய்துகொண்டிருந்தார் எதோ ஒரு வேலையாக மதுரை செல்ல வேண்டியிருந்ததாம் ஜீப்பில் தான் அரசு அதிகாரிகள் அப்போ செல்வார்கள் .
அப்பாவின் ஜீப்பை ஓட்டிய ட்ரைவர் அன்று மிகவும் பதட்டத்தில் வேகமாக வண்டியை ஒட்டினாராம் அவருடைய மனைவிக்கு தலைப்ரசவம் 
உடனே ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கணும் அலுவல் முடிந்ததும் வீட்டுக்கு போகணும் என்று அவசரத்தில் ஒட்டினாராம் ..அப்போ அவர் எதிர்பாராதவிதமா கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரில் வந்த நாலுகால் ஜீவனை கவனிக்காமல் மோதிவிட்டார் ..வண்டியை நிறுத்திவிட்டு ஓவென்று அழுதுவிட்டாராம் ..உயிர் மட்டும்தான் போகவில்லை ஆனால் ரத்த சகதியில் அந்த ஜீவன் அங்குள்ளவர்கள் தூக்கிஎரிய சொன்னார்களாம் குப்பைத்தொட்டியில் ..ஆனால் அப்பா மனசுகேளாமல் ஒரு கூடையில் அள்ளிபோட்டு முதலுதவி செய்து அருப்புகோட்டையில் சுமார் 3 மாதங்கள் கவனித்து பராமரித்திருக்கிறார் ..பின்பு அதை எடுத்த இடத்திலேயே கொண்டு விட சென்றார்களாம் டிரைவரும் அப்பாவும் ஆனால்  அது ஜீப்பை விட்டு இறங்காமல் அடம்பிடிக்கவும் நன்கு பழகி விட்டதால் அப்பாவும் அதைபிரிய மனசில்லாமல் ஒரு நாள் ரயிலில் ஏற்றி சென்னைக்கு கொண்டுவந்தார் .அந்த நாலுகால் ஜீவனுக்கு அந்த டிரைவர் வைத்தபெயர் மீனாட்சி ....
மீனாட்சி ஒரு உயர்ரக ராஜபாளையம் நாய் ..அது எப்படி ரோட்டுக்கு வந்ததென்று தெரியல ...பலர் ஆசைப்பட்டு வாங்கி வளர்க்க முடியாம ரோட்டில் எங்கோ கொண்டு விடுகின்றனர் :( வாயில்லா  ஜீவனுக்கு என்ன தெரியும் பாவம் .ரோட்டில் அலைந்து திரிந்து வாழ்கையை நடத்துதுங்க ...மீனாட்சி எங்க வீட்ல 12 வருஷம் இருந்தாள் .படத்தில் இருப்பது மீனாட்சி .
========================================================================

சிறகு அவரை /சதுரபயிர் 
-----------------------------------------
இந்த அவரையை முன்பு ஆசிய கடையில் பார்த்திருக்கேன் ஆனா சமைக்க தெரியாததால் வாங்கியதில்லை .சமீபத்தில் மீண்டும் பார்த்தேன் உடனே மேனகா கிட்ட ரெசிப்பி கேட்டு சமைத்தேன் ..ஆஹா ருசியோ ருசி !
பீன்ஸ் தோரன் போலத்தான் சமைக்கணும் 


மெல்லியதாக நறுக்கினால் சதுர வடிவில் வருவதால் சதுரபயிர்னு சொல்றாங்களோ தெரியலை .அதை கடுகு வெங்காயம் சிவப்பு மிளகாய் கூட சேர்த்து தாளித்து உப்பு அப்புறம் தேங்காய் துருவலுடன் வதக்கிசேர்த்து மூடிபோட்டு வேகவைத்து நன்கு வெந்ததும் ஏற்கனவே வேகவைத்த பாசிபருப்பையும் சேர்த்து கலந்து விட்டேன் .பாசிபருப்பை பாத்திரத்தில் நீர்சேர்த்து 10 நிமிஷம் வேக வைத்து சேர்த்தேன் .

மஞ்சள் மாங்கா இஞ்சி ஈசி ஊறுகாய் ..
--------------------------------------------------------------


இது குஜராத்தி நண்பி ஒருவர் சொன்ன ரெசிப்பி ..
இங்கே எங்களுக்கு வட இந்தியர் உணவு வகைகள் தாராளமாக கிடைக்கும் .
பச்சை மஞ்சள் எப்பவும் கடையில் பார்ப்பேன் அதுபோலதான் மாங்கா இஞ்சியும் ..
குஜராத்தியர் இதில் தாளிக்காமல் ஊறுகாய் செய்கிறார்கள் .
மஞ்சளில் தனியாகவும் மா இஞ்சியில் தனியாகவும் செய்யலாம் நான்  இரண்டையும் சேர்த்து செய்தேன் ..
தேவையான பொருட்கள்
------------------------------------------
மஞ்சள் கிழங்கு ....1
மாங்கா இஞ்சி ....1 
எலுமிச்சை சாறு இரண்டு பழங்களில் பிழிந்தது ..
உப்பு தேவையான அளவு ..
இரண்டு கிழங்குகளையும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி ஒரு பாட்டிலில் போட்டு ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து அவை மூழ்குமளவு எலுமிச்சை சாறு ஊற்றி இருக்க மூடி குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும் .
தினமும் தொடர்ந்து 7 நாட்களுக்கு எடுத்து குலுக்கி மீண்டும் உள்ளேயே வைக்க வேண்டும் 7 வது நாள் நன்கு ஊறியிருக்கும் உணவுடன் ஒன்றிரண்டு துண்டுகள் சாப்பிட வேண்டும் ..
எளிமையான ருசியான ஊறுகாய் ..

மீண்டுமொரு பதிவில் சந்திப்போம் ..
************************************************************************************************************

2/7/16

எங்கே செல்லும் இந்த பாதை :( ,புகையிலை விழிப்புணர்வு,

எங்கே செல்லும் இந்த பாதை :(
=============================
இளைய தலைமுறையை புகையிலை பழக்கத்துக்கு அடிமையாக்கும் பழக்கம் வேகமாக அரங்கேறி வருகிறது நம் சென்னையில்  பள்ளிகளில் அருகிலுள்ள பெட்டிகடைகளில் விற்கப்படும் கூல் லிப் தயாராவது பஞ்சாபில் ..கொடிகட்டிபறப்பது பள்ளிகூடங்கள் அருகிலுள்ள கடைகளில் :(  .நம் தமிழ் நாட்டில்  கிடைக்கும்   ஹன்ஸ், மாவா, கருடா,கூல் லிப், சைனி-கைனி, துளசி, கணேஷ், ஸ்டார் போன்ற வகை புகையிலை பாக்கெட்டுகளில் இதன் தயாரிக்கும் இடம், தயாரிப்பாளர் பற்றி விபரம் கொடுக்கப்படவில்லை. இவை ஒன்று கூட தமிழகத்தில் தயாரிக்கப்படவில்லை. அனைத்தும் வடமாநிலங்களில் தயாரிக்கப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது
இனிப்பு சுவையுடன் கவர்ச்சியான பாக்கெட்டில் விலை மலிவா ஒரு விஷம் :(
கடந்த வாரம் ஹிந்து நாளிதழ் செய்தி இது.புகையில்லா புகையிலையாம் பாதிப்பில்லா  புகையிலை என்று எங்காவது உண்டா ..?? துப்ப வேண்டிய அவசியமில்லை வாய்க்குள்ளேயே வச்சிக்கலாம் !!என்னவொரு கொடுமை ..எனக்குதெரிந்து ஹார்லிக்ஸ் விளம்பரம்தான் குடிக்கவேணாம் அப்படியே சாப்பிடலாம்னு வரும் முன்பு !

வாய் துர் மணத்தை  நீக்க பயன்படுத்துங்கள் பயன்படுத்துங்கள் என்ற விஷ விளம்பரத்துடன் விற்பனையாகிறது இந்த கூல் லிப் .குழந்தைகள் முதல் பெரியவர் மத்தியில் மிக பிரபலமாம் !
பள்ளிக்குழந்தைகள் சாக்லேட்டை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வது போல இந்த இந்த பொருளை பகிர்ந்துகொள்கிரார்களாம் ..எவ்வளவு ஆபத்தான விஷயம் ..கெட்டதில் நல்ல கெட்டது என்று எங்காவது கேள்விபட்டிருக்கிறீர்களா ??..இந்த பொருளின் விளம்பரம் அதைதான் சொல்கிறது .

இதிலுள்ள குட்காவில் புகையிலையும் கலந்துள்ளதாம் மேலும் இதில் சேர்க்கப்படும் பாக்கில் பூஞ்சை மற்றும் பல நுண்ணுயிரிகள் இருக்காம் .இதன் தயாரிப்பாளர்கள் கவர்ச்சியாக காட்ட அதிக செயற்கை நிறத்தையும் அதிகளவு இனிப்பையும் சேர்த்து விற்கிறார்கள் .எல்லாமே உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை .மதிய உணவு சாப்பிட்டபின் பள்ளிகருகில் உள்ள கடைகளுக்கு சென்று வாங்கி பிள்ளைகள் சாப்பிட துவங்குவார்கள் ஆரம்பத்தில் ஓரிரு பாக்கெட் என துவங்கி அப்படியே அடிமையாகிறார்கள .கன்னங்களுக்குள் அல்லது நாக்குக்கும் உதட்டுக்கும் கீழே அதக்கி வைத்துஒரு கட்டத்தில் அது இல்லைன்னா முடியாமல் போகும் மாணவர்களுக்கு .
மருத்துவர் Dr Sadaf Ahmed கூறுகிறார் !
இனிப்பு சுபாரியில் உள்ள arecoline எனும் பொருள் ஈறுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் தொடர்ந்து பயன்படுத்தினால் oral submucous fibrosis .தாடைகளை மேலும் கீழும் அசைக்க முடியாத  என்ற நோய் தாக்கும் .இதனால் பிள்ளைகள் வளர்ச்சியின்றி மெலிந்து காணப்படுவார்கள் .காரமான உணவுகளை சாப்பிட்டதும் பற்களும் ஈறுகளும் எரியத்துவங்கும் .சுபாரி மற்றும் பாக்கு உலகறிந்த புற்றுநோய் காரணி என்கிறார் மற்றொரு மருத்துவர் ஆயிஷா .
இவற்றின்  தீமைகளை மாணவர்களுக்கு சிறுபிள்ளைகளுக்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய பத்திரிக்கை தொலைக்காட்சி போன்றவையே இந்த தீய பொருட்களுக்கு கவர்ச்சிகரமான விளம்பரம் ஒளிபரப்பி தொலைப்பதுதான் கொடுமை :(
ஒரு ஆஜானுபாகுவான மனிதன் இதை வாயில் போட்டு உடனே தனது எதிரிகளை துவம்சம் செய்வது போன்ற விளம்பரங்களை  விழி அகல வாய்பிளந்து பார்க்கும் பிள்ளை அதுதான் நிஜம் என்று நினைக்காதா !! அந்த பிள்ளைக்கு தெரியுமா இனிப்பு சுப்பாரியில் இருப்பது நிகோடினும் CAFFEIN உம் விஷம் என்பது :( 
பெற்றோரும் பிள்ளைகள் கையில் பணத்தை கொடுக்கின்றனர் அவர்கள் என்ன வாங்கி உண்கின்றனர் என்பதை கண்காணிப்பதில்லை .
மேலும் பல் மருத்துவர் Dr Sadaf கூறுகிறார் .அவரிடம் பல் சம்பந்தமான பிரச்சினையுடன் வெளிநோயாளிகளாக வருபவர்களில் அதிகமானோர் பள்ளி மாணவர்களே .
நம் நாட்டில் ரெகுலர் பல் பரிசோதனை பள்ளி மாணவர்களுக்கு கிடையாது ஆகவே  OSF தாக்கிபின்னரே அறுவை சிகிச்சை செய்யும் மூன்றாம் நிலையில் மருத்துவரை நாடுகிறார்கள் அதனால்பல் பரிசோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும் ..
சமீபத்தில் சிறுவர்களுக்குப் புகையிலைப் பொருட்கள் விற்பதைத் தடை செய்யும் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்படி, சிறுவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ஒருலட்சம் ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது...சட்டம் இந்த மாதிரி பள்ளிகளருகில் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

தகவல் இணையம் 


2/2/16

Loud Speaker ...33, கோழித்தோழி ஹென் :) ,வாழ்நாள் முழுக்க kit kat ,பூனைகளுடன் புத்தகம் வாசித்தல் (cat therapy )

இன்றைய ஒலிபெருக்கியில்  கோழித்தோழி  ஹென் :) ,வாழ்நாள் முழுக்க kit kat ,பூனைகளுடன் புத்தகம் வாசித்தல் (cat therapy ) 
நானும் கோழித் :) தோழி  ஹென்னும் ..
-----------------------------------------------------------

இங்கே மகள் ப்ரைமரி ஸ்கூலில் எனக்கு கிடைத்த இரண்டு நட்புக்கள் 
ஒருவர் huyen nguyen வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்  இன்னொருவர் ரீஸா பாகிஸ்தானியர் ..மூவரும் ஒன்றாகவே பள்ளி விடும்போது சென்று பிள்ளைகளை அழைத்து வருவோம் .சிலநேரம் மாறி மாறி டைம் டேபிள் போட்டு ஒருவரே சென்றும் பிள்ளைகளை அழைத்து வருவோம் .
இதில் நம்ம ஹென் நிறைய சாக்லேட்ஸ் எனக்கு தருவாங்க .. :) 
அவங்க பேர் எனக்கு வாயில் நுழையாது எனக்கு மட்டுமில்லை யாருக்கும் நுழையாத பெயர் .ஒரு நாள் பாகிஸ்தானிய நண்பி என்னை தொலைபேசியில் அழைத்து இன்று //ஹென் //உங்களை மூவரின்  பிள்ளைகளையும்  அழைத்து வர சொன்னார்  என்றார் ..நான் யார் அது ஹென் என்றேன் ..அதற்க்கு ரீசா சொன்னார் ..கிம் இன் அம்மா . எனக்கேற்றார்போல வசதிக்கு ஹென்ஆக்கிட்டேன் என்றார் :)))அப்போ என் பெயர் என்று மெதுவா கேட்டேன் 
அதற்க்கு an ஷொர்ட் அன்ட் ஸ்வீட் என்றது :) 
ஹென்  விதவிதமா அகர் அகர் ஜெல்லி செய்வார் ..குழாய் புட்டு அதில் கிட்னி பீன்ஸ் தேங்காய் வெல்லம் போட்டு செம டேஸ்டா இருக்கும் ..
..இந்த ஹென் உடன் பள்ளி எதிரில் இருக்கும் ஆசிய மார்க்கெட்டுக்கு ஒருமுறை சென்றேன் பத்து பாகற்காய்களை அள்ளி எடுத்தார் ..நான் ஆச்சர்யமுடன் கேட்டேன் நீங்க இவற்றை சமைப்பீர்களா !!

உடனே ஆமா என்றார் //நாங்க பாகற்காயில் சூப் செய்வோம் நாளை உனக்கு செய்து தரேன் எனவும் எனக்கும் ரொம்ப சந்தோஷம்..அடுத்தநாள் சென்றேன் டேபிளில் அழகா சூப் கோப்பைகளில் பாவக்கா முழுசா மிதக்குது..சூப் ருசியாவே இருந்தது !முள்கரண்டி எடுத்து பாவக்காயை குத்தி வாயில் வைத்து கடித்தேன் எதோ வித்யாசமாக பட்டது !! அவரிடம் இதில் என்னென்ன சேர்த்திருக்கு எனவும் அவர் சொன்னதைகேட்டு மயங்கி விழாத குறை !! உள்ளே நெத்தி கருவாடும் சிக்கனும் வேகவைத்து அரைத்து  stuff செய்தாராம் .நான்  சைவம் என்பதை அவருக்கு சொல்லவில்லை என் தவறுதான் ..கயிறு போட்டு கட்டி இருந்ததால் உள்ளே என்ன இருக்குன்னு எனக்கு சின்ன டவுட் கூட வரல்லை !அதுவுமில்லாம அம்மா எப்பவும் சொல்வார் ஒருவர் அன்போடு கொடுப்பதை ஆராயக்கூடாது வாயில் போட்டுக்கணும் என்று ..ஒருவாறு சுதாரித்து ..உடனே அவசரமா நான் வீட்டுக்கு போணும் எலெக்ட்ரிசிடி  மீட்டர ரீடிங் எடுக்க வராங்க இந்த சூப்பை வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிடுகிறேன் என்று பாக் செய்து வீட்டுக்கு கொண்டு வந்தேன் !அது குப்பைதொட்டிக்கு போனது ஹென்னுக்கு தெரியாது அவ்வவ் ..
ஹென்  பேசுவது அந்த பள்ளியில் எனக்கும் ரீசாவுக்கும் மட்டுமே புரியும் ..
beef அவர் வாயில் பீப் ,டீச்சர் ரீச்சர் ,ஸ்டமக் ..டமக் .fish பிஸ் ,மை சிஸ்டர் இன் லா ...மை சிசர் இன் லவ் careful ..கேவல் இப்படி சொல்லிட்டே போலாம் ..ப்ரைமரி முடிந்து மகள் வேறு செகண்டரி பள்ளி போனாள் அத்துடன் தொடர்பு விட்டுப்போனது ரொம்பநாள் கழிச்சி இன்று அந்த ஹென் எனக்கு போன் செய்து தனக்கு பிரிட்டிஷ் சிடிசன்ஷிப் கிடைத்துவிட்டதை மகிழ்வுடன் சொன்னார் ..
=======================================================================

Kit Kat 
----------

இங்கே மல்ட்டி pack kit kat wafer சாக்லேட்ஸ் சைமா அஹமத்னு ஒரு 20 வயது பொண்ணு வாங்கியிருக்கா .
ஒரு பாக்கெட்டில் 8 சாக்லேட் இருக்கும் ஆனா இந்த பொண்ணு வாங்கின பாக்கெட்டில் சாக்லேட் இருக்கு wafer இல்லையாம் ..{நம்ம ஊரா இருந்தா அதுதான் இதுன்னு ஜோக்கடிச்சி சமாளிச்சிரலாம் }அந்த எட்டு பாரிலும் வெறும் சாக்லெட்டா இருந்திருக்கு உடனே நெஸ்லே கம்பெனிக்கு லெட்டர் போட்டிருக்கு //நீங்க எனக்கு வாழ்நாள் முழுதும் சாக்லேட் அனுப்பி வைக்கணும் wafer இல்லாத சாக்லேட்டை விற்று என்னை ஏமாத்திட்டீங்க ..
//I would therefore like to request a lifelong supply of KitKat so that I can act as a means of quality control – it appears you need me more than I need you.”// 
அதே போல இன்னொரு பொண்ணு ட்வீட் செஞ்சிருக்கு //My KitKat is waferless and I am sad.
Please respond soon, I am very hungry. // எப்படியெல்லாம் யோசிக்கறாங்க !!
====================================================================

கற்றல் குறைபாடு உள்ள மனிதர்கள் பெரும்பாலும் எதற்கும் பதட்டம் பயம் சுயமாக சிந்திக்கும் திறனின்றி வாழ்க்கையில் முன்னேற கஷ்டபடுவார்கள் .
இங்கே என கணவருடன் வேலை செய்யும் பல ப்ரித்தானியர்களுக்கே ஸ்பெல்லிங் தெரியாது ..banana என்பதை binena ,onion என்பதை anyan என்று ஸ்பெல்லிங் எழுதுவாங்க dyslexic என்று இவர்களுக்கு தனி சலுகையுமுண்டு.எங்கே வாசிக்கும்போதோ எழுதும்போதோ தவறா உச்சரித்து விடுவோமேன்றோ ,எழுதிடுவோமென்று பயந்தே தவறுகளை செய்வார்களாம் :(
போர்ட்லண்டில் இப்படி கற்றல் குறைபாடுள்ளவர்களை புத்தகங்களுடன் cat ஹோமுக்கு கொண்டு சென்று ஆளுக்கொரு பூனையும் கொடுத்து அதன்முன் சத்தமா வாசிக்க செய்தார்களாம் ..என்ன ஒரு விந்தை எல்லாருமே சந்தோஷமா தைரியமா அவர்களுக்கு கொடுத்த ஆங்கில புத்தகத்தை வாசிச்சிருக்காங்க அதில் 24 வயது ஆண் சொல்லியுள்ளார் //மனிதர் முன்னால் வாசிக்க சொன்னா எனக்கு கைகாலெல்லாம் நடுங்கும் ,முக மெல்லாம் அவமானத்தால் சிவக்கும் ஆனா பூனைங்க முன்னாடி வாசிச்சா அதுங்க தவறா இருந்தாலும் கிண்டலோ கேலியோ செய்யாதுங்க ,இவன் படிக்கிறதுக்கே லாயக்கில்லை என்று ஜட்ஜ் செய்யாதுங்க ஆகவே நான் மன தைரியமுடன் பயமில்லாம வாசிக்க முடிகிறது //
பெரியவங்க மட்டுமில்லை ஸ்கூல் படிக்கும் பிள்ளைகளுக்கும் இந்த முறையை அறிமுகபடுத்தி வெற்றி கண்டுள்ளனர் ஆசிரியர்கள் .படத்தில் உள்ள சிறுவன் ரொம்ப லோ லெவலில் இருந்து பூனைங்க முன்னாடி புக் வாசித்து இப்போ நல்லா தைரியமா படிப்பிலும் கிரேட்ஸ் மேலே வந்திருக்காராம் !

======================================================================
மற்றொரு பதிவில் சந்திப்போம் அன்புடன் ஏஞ்சல் .