அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/12/14

Loud Speaker ..13 ஆரம்ப் ஹெல்ப் டெஸ்க்,Christmas Crafts ,முனிக்கி சாம்பார்

இன்றைய லவுட் ஸ்பீக்கரில் ஆரம்ப் ஹெல்ப் டெஸ்க் ,மெரினா பீச்சில் கூடும் பறவைகள் பற்றிய சகோதரர் ஜாக்கி சேகரின் காணொளி ,
pomander ball ,மீள்சுழற்சி பாஸ்கட் மற்றும் ரசித்து ருசித்த முனிக்கி சாம்பார் :)


உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய நாடு நமது இந்தியா ..
ஆனால பல பிள்ளைகளுக்கு முறையான மேசை கூட பல கிராமப்புற பள்ளிகளில் இல்லையென்பது வேதனைக்குரிய விஷயம் .
மேசை,நாற்காலியில் அமர்ந்து பள்ளியில் படிப்பது எழுதுவது என்பது ஒரு வித வசதி மட்டுமின்றி அழுக்கான தரையில் அமர்ந்து முறையற்ற நிலையில் சாய்ந்து குனிந்து எழுதுவது ஒழுங்கற்ற மோசமான கையெழுத்துக்கு வழி வகுக்கும் .
Aarambh என்ற மும்பையை சேர்ந்த  தன்னார்வ தொண்டு நிறுவனம் 
இப்படிப்பட்ட அடிமட்ட குடும்பங்களை சார்ந்த கிராமப்புற பள்ளி பிள்ளைகளுக்கென ஹெல்ப் டெஸ்க் ஒன்றினை வடிவமைத்துள்ளார்கள் .

இவர்கள் தொழில் நிறுவனங்கள் பெரிய சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் பெரிய நிறுவனங்களில்  இருந்து பொருட்கள் சுற்றி வரும் அட்டை பெட்டிகளை சேமித்து அவற்றை மீள் சுழற்சி செய்து அதனை டூ இன் ஒன் பெட்டி மற்றும் தரையில் அமர்ந்து எழுதும் சிறு மேஜை போல வடிவமைத்து உள்ளார்கள் .பெட்டிக்குள் புத்தகத்தை உள்ளே வைத்து 
பள்ளிக்கு எடுத்து சென்று அங்கே அமரும்போது அதை சிறு மேஜையாக்கலாம் !. காணொளி பார்க்கவும் .
மகாராஷ்டிரா பகுதியிலுள்ள சில பள்ளிகளுக்கு ஆரம்ப் 
நிறுவனம் இலவசமாக இவற்றை விநியோகித்துள்ளார்கள் .
Kindness is not an act, it’s a lifestyle.
அடுத்து ஒரு காணொளி மற்றும் மனதுக்கு சந்தோஷம்  தரும் ஒரு விஷயம் `.நண்பர் ஜாக்கி சேகர் அவர்களின் பதிவில் பார்த்தது .
அவரே அழகாக விளக்குகிறார் பாருங்களேன் ..

                               https://www.youtube.com/watch?v=oPJ2AxQxVlg    

Pomander Ball ..


                                                                           


                                                                                   
இது கிறிஸ்மஸ் காலங்களில் இங்கே எல்லா வீடுகளிலும் 
செய்ய ஆரம்பிப்பாங்க ..ஆரஞ்சு பழங்களில் எல்லா இடத்திலும் பல் குத்தும் குச்சியால் துளையிட்டு அதில் கிராம்பை குத்தி வைக்கணும் .
பிறகு அதை ஒரு ரிப்பனில் கட்டி கிறிஸ்மஸ் மரத்தின் டெகரெஷன்சுடன்  கட்டி தொங்க விடனும் ..அதுவே காய்ந்து விடும் காய காய ஆரஞ்சு மற்றும் கிராம்பின் மணம் இல்லமெங்கும் நறுமணமாக வீசும் .
சிலர் கிராம்பு குத்தியபின்பு தூள் செய்த பட்டை மற்றும் கிராம்பு 
 தூளில் உருட்டியும் வைப்பார்கள் .இது நான் நார்த்தங்காய் என்று நினைச்சி வாங்கின எலுமிச்சை பழத்தில் செய்தது :)

                                                                                   

செய்முறை விளக்கம் இங்கே 
கிறிஸ்மஸ் என்றால் கார்ட்சும் முக்கியமான ஒன்று இங்கிலாந்தில் .

 முகபுத்தகத்தில் பகிர்ந்தேன் இங்கே உங்களுக்கும் 
செய்முறையோடு ..
                                                                                  

           இது ஒரு மீள்சுழற்சி செய்யப்பட்ட கிரீட்டிங் கார்ட் பாஸ்கட் ..நம்ம நாட்டிலும் கிருஸ்மஸ் புத்தாண்டு திவாளி பொங்கல் ரம்ஜான் கார்ட்ஸ் பார்த்திருக்கேன் ..நாம் அனைவருக்கும் பண்டிகைக்கு முன்பே போஸ்ட் பண்ணிடுவோம் ..
ஜெர்மனில இருந்த வரைக்கும் சும்மா வாழ்த்திப்போம் அவ்வளவுதான் ..ஆனா இங்கே இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்மஸ் வர ஒரு மாதமிருக்குமுன்பே கார்ட்ஸ் கடைகள் களை கட்டும் ..இங்கு வந்த புதிதில் எங்களுக்கு தெரியாது ஆலயத்தில் கூட அனைவருக்கும் பெயரெழுதி கார்ட்ஸ் வச்சிருப்பாங்க !
அப்புறம் இப்போ ஒரு தெருவில் அனைவர் வீட்டு லெட்டர் பாக்ஸிலும் நாமே நேரில் போட்டு விடனும் கார்ட்சை ..பேரெல்லாம் தெரியாட்டியும் பரவாயில்லை வீட்டு இலக்கம் எழுதி போடுவோம் !
பண்டிகை முடிந்ததும் பார்த்தா !கூடை நிறைய அள்ளலாம் இந்த வாழ்த்து அட்டைகள் ..சில இடங்களில் recycle செய்வார்கள் .ஆனால் அங்கு எடுத்து செல்லனும் .எனக்கொரு பிரிட்டிஷ் நண்பி இப்படி பழைய கார்ட்சை வைத்து சிறு கூடை போல செய்ய சொல்லித்தந்தார் ..
இதில் கார்ட்ஸ் மட்டும் பயன்படுத்தணும் என்றில்லை பழைய சீனரிஸ் புகைப்படங்கள் கூட இருந்தால் பயன்படுத்தி செய்யலாம் 
இந்த சுட்டியில் பாஸ்கட்டுக்கு template செய்முறை எல்லாம் இருக்கு ..      

அடுத்தது ரசித்து ருசித்த சமையல் :) சகோதரி உமையாள் காயத்ரியின் 
பருப்பு முனிக்கி சாம்பார் ..

                                                                                        


                                                                                                                                                      தோசைக்கு மட்டுமில்லைங்க 
சாதத்திலும் ஊற்றி சாப்பிடலாம் சுவையோ சுவை ..செய்திட்டு காதை  கிட்ட வச்சி கேட்டேன் ..//நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி //
பாட்டு வருதான்னு :) வரல்லையே வரல்லையே அதுக்குப்பதில் வேற பாட்டு கேட்டது :)
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் :)))

மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் ..அன்புடன் ஏஞ்சலின் :)                                                             

12/8/14

குடும்பப் பெண்களையும் விட்டு வைக்காத அபாயகரமான ஒரு போதைப் பழக்கம்

ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்குமே  விதவிதமான தனிப்பட்ட பிரச்சனைகள் சிக்கல்கள் இருக்கின்றன. மூன்று பேரே வசிக்கும் சிறிய குடும்பமாக இருந்தாலுமே ஒருவரின் மன சிக்கல் மற்றொருவருக்கு தெரியாத அளவிற்கே இன்றைய சூழல் இருக்கிறது.. எந்த வயதினராக இருந்தாலும் கண்டுக்கொள்ளப் படாமல்  தனித்து விடப்படும் ஆணோ பெண்ணோ, தவறான வழியை நோக்கி எளிதாக ஈர்க்கப்பட்டு விடுகின்றனர். ஒரு முறை தவறியவர்கள் மீண்டெழுவது கடினம். சம்பந்தப்பட்ட நபர் தவறான பழக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதே அவரின் வீட்டினருக்கு தெரிவதில்லை, நிலைமை முற்றியபின் ஐயோ இப்படி ஆகிபோச்சே என்று அரற்றுவதில் பயனென்ன?!!

குடும்ப உறுப்பினரின் நடவடிக்கையில் சிறு மாற்றம் தெரிந்தாலும் உடனே எச்சரிக்கை ஆவது எத்தகைய அவசியம் என்பதை ஒரு பெண்ணின் பரிதாப வாழ்க்கை எனக்கு புரியவைத்துவிட்டது. மாணவர்கள் மட்டுமல்ல குடும்பப் பெண்களிடமும் தாராளமாக இப்பழக்கம் இருக்கிறது என்பதும் அதனால் அவர்களின் குழந்தைகள் படும் துன்பங்கள் மிக கொடுமை என்பதையும் நேரில் கண்டு  அதிர்ந்தேன். அதை பிறருக்கு தெரிவித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கட்டுரை.

அபாயகரமான ஒரு போதை பழக்கம் / inhalant addiction ..
சிறு பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதாக எண்ணிக் கொண்டு போதையில் விழுந்து தீரா துன்பத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.   

விலை மலிவு, எளிதாக கிடைக்கக் கூடிய ஒரு போதைப் பொருள் தான்  whitener அல்லது correction fluid எனப்படும் வெண்ணிற திரவம்

சில துளிகளை கர்ச்சீபில் தெளித்து பின் அதை முகர்ந்து பார்ப்பதன் மூலமும் பாட்டிலை திறந்து ஆழ்ந்து உள்ளிளுப்பதன் மூலமும் போதை ஏற்படுகிறது. எல்லா டிபார்ட்மென்ட் ஸ்டோரிலும் எளிதாக கிடைக்கக் கூடியது. சிறு குழந்தைகள் சென்றும் வாங்கலாம், ஒரு சில கடைக்காரருக்கே இது ஒரு போதை பொருள் என தெரிய வாய்ப்பில்லை. தவிரவும் பான் மசாலா, பெட்டிக் கடைகளிலும் தெரிந்தே இப்பொருள் விற்கப் படுகிறது.  

பொதுவாக தட்டச்சு எந்திரங்கள் யன்பாட்டில் ள்ள அலுவலகங்கள் மற்றும் வேறு இடங்களிலும் வலம் வந்தது இந்த வெண்ணிற திரவம். கம்பியுட்டர், பிரிண்டர், ஸ்கேனர் என்று மாறிய பின் இந்த fluid whitener பயன்பாடு  பள்ளி மாணவர்களிடையே அறிமுகமாகியது. தவறான எழுத்துக்களை அழிக்க  இந்த திரவத்தை நோட்டு ுத்தகத்தில் தடவ அப்போது அதில் இருந்து வரும் வாசனை  மீண்டும் மீண்டும் அதையே நுகர  தூண்டியுள்ளது. அப்படித்தான்  ஆரம்பித்தது இந்த  போதை பழக்கம்.. 

அந்த பெண்ணிற்கு திருமணம் முடிந்து இரு குழந்தைகள் பிறந்த பிறகும் இப்பழக்கத்தை விடாமல் அதிகமாக நுகரத் தொடங்கினார். அதற்கு வசதியாக  சூழ்நிலைகளும் அமைந்தன. கணவர் இந்த பழக்கத்தை கண்டுப்பிடித்து கண்டிக்க ஆரம்பித்தார். சிறிது காலம் மறந்ததை போல இருந்துவிட்டு கணவர் வெளிநாடு சென்றதும் மீண்டும் ஆரம்பித்தாள். பாட்டில்களாக வாங்கி குவித்து இதுவரைக்கும் ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்திருக்கிறாள் என்று அவளது தாய் சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. குழந்தைகள் இருவரும் பாட்டி, தாத்தா வீட்டில் வளர்ந்து வருகிறார்கள். போதை மயக்கத்தில் இருக்கும்போது அருகில் வரும் குழந்தைகளை அடிப்பதும், கண்டபடி திட்டுவது, பொருட்களை அவர்கள் மீது வீசி எறிவதுமாக இருந்திருக்கிறாள், பயந்து போன இவளது தாய் பேரக்குழந்தைகளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.

வசதிக்கு குறைவில்லாத வீடு, வேலைக்கு ஆட்கள், தனிமை எல்லாம் வாய்ப்பாக அமைய ஒரு நாளைக்கு நாலு, ஐந்து பாட்டில்கள் என காலியாயின. இவளது நடவடிக்கை மோசமாக செல்வதை புரிந்துக் கொண்ட கணவன் மாமியார் வீட்டிற்கு சென்று குழந்தைகளை மட்டும் பார்த்து விட்டு வெளிநாடு போய்விடுவானாம். ஆரம்பத்தில் இதில் என்ன இருக்கிறது என்ற இந்த பெண்ணின் ஆர்வம் இப்போது ஒரு மன நோயாளியாக்கி விட்டது. கணவனை, குழந்தைகளை பிரிந்தாள், ஆனால் தன்னால் தனது குடும்பமும் சிதறி போனது பிள்ளைகள் தவிப்பது என இவை  எதை பற்றியும் கவலையின்றி தனக்குள் சிரிக்கிறாள், பேசுகிறாள்...பேசிக்கொண்டே இருக்கிறாள் !!?


இவள் மட்டுமல்லஇவளை போல பலர் இன்று இந்த பழக்கத்திற்கு அடிமையாகி மீள முடியாமல் கிடக்கிறார்கள். நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் மட்டும் இதற்கு அடிமையானோரின் எண்ணிக்கை 8000 சிறார்கள் என்கிறது ஒரு சர்வே. ஒவ்வொரு மாதமும் 30 சிறார்கள் போதை பொருள் மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்கென வருகிறார்கள். குடிசைப்பகுதி மற்றும் இளம் குற்றவாளிகள் மத்தியில் இப்பழக்கம் மிக வேகமாக பரவி வருகிறது.   
ஒரு 15ml bottle ரூபாய் 30/- க்கு கிடைக்கிறது. Whitener மட்டுமல்ல, நெயில் பாலிஷ் ரிமூவர் , ஷூ பாலிஷ் திரவம், பெயின்ட் தின்னர்  போன்றவற்றையும் முகர்ந்து மயக்க நிலைக்கு செல்கிறார்கள். இந்த பொருட்களில் உள்ள ரசாயனம் முகர்ந்த உடன் நேரடியாக மூளையை சென்றடைகிறது. இத்தகைய உடனடி போதை பல குற்றங்களை செய்யத் தூண்டுகிறது. காசு கேட்டு கொடுக்காத தந்தையை கத்தியால் குத்தியுள்ளான் சிறுவன் ஒருவன், காரணம் இந்த Whitener போதை. பல குற்றச்  சம்பவங்களின் பின்னணியில் இந்த Whitener பங்கு வகிக்கிறது.


தற்போதைய ஆய்வுகளின் படி மத்திய நடுத்தர குடும்பத்து பிள்ளைகளே இப் பழக்கத்திற்கு அதிகளவில் அடிமையாகின்றனர். ஆர்வகோளாரில் ஆரம்பிக்கும் பழக்கம் வாழ்க்கையின் அஸ்திபாரத்தையே ஆட்டம் காணச் செய்து விடுகிறது.கேரள மாநில காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பித்த ஒரு அறிக்கையில் சொல்கிறது இந்த whitener முகர்தல் பழக்கம் நாளடைவில் குடிபழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும் என்று.13முதல் 17 வயது மாணவர்கள் மத்தியில் இந்த Inhalant போதை பழக்கம் தடுக்க இயலாதபடி வேகமாக பரவிவருவதால் இதற்கெதிராக ஒரு பெட்டிஷன் நார்கொடிக்ஸ் மையத்தில் அளிக்கப்பட்டு உள்ளதாம் .இதைப்பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் மக்கள் மத்தியில் பரவ வேண்டும் .


பதின்ம வயது எதையாவது செய்து தனித் தன்மையை நிலைநாட்ட வைக்க முற்படும் வயது. அந்த வயதில் புதிய அனுபவங்களை மனம் நாடும். எல்லைகளையும் தடைகளையும் உடைக்க சொல்லும் பருவம். அதை கவனமுடன் கையாள வேண்டும். குறிப்பாக பெற்றோர் பிள்ளைகள் மத்தியில் அன்பாகவும், அனுசரணையுடனும்  நடந்துக் கொள்ளவேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை உற்று கவனிக்க வேண்டும். இந்த Inhalant போதை பழக்க விஷயத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் தெருவோர பிள்ளைகள் இருவரும் அடிமையாகி உள்ளனர்

இதன் தீமைகள்* இந்த வெண்ணிற விஷம் எழுத்துப் பிழைகளை  மட்டும் அழிப்பதில்லை !மனித மூளையின் ஞாபக சக்தியையும் அழிக்க வல்லது .


* மனநிலை பாதிப்பு ஏற்படும்.  இதயம், நுரையீரல்,மூளை,கிட்னி, ஈரல் போன்றவை பாதிக்கப்படும்.

* இந்த காரத் தன்மையுள்ள டொலூவீன்  மற்றும் trichloroethane  நுகர்வுக்கு பின் எட்டு மணி நேரத்துக்கு போதைத் தன்மை உண்டாக்கும். இதிலுள்ள ஹைட்ரோ கார்பன்கள் இரத்தத்தில் உடனடியாக கலந்து மத்திய நரம்பு மண்டலத்தை அடைகின்றன. 

* தனக்குள்ளே சிரிக்கும் செயல் ஒரு வித ஹாலுசினேஷன் நிலை, அதாவது  தன்னிலை மறப்பது . இந்த போதை பழக்கத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்று .

* தூக்கமின்மை, பேச்சு குளறுதல், தடுமாற்றம், ஞாபக மறதி ,மங்கலான பார்வை, தலைவலி, சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பது, முன்னுக்கு பின் முரணாக நடப்பது.

* இதய துடிப்பு சீராக இல்லாதவர்களுக்கு உடனடி மரணம் ஏற்பட அதிக வாய்பிருக்கிறது.

* தற்கொலை செய்துக் கொள்பவர்களில் 40 சதவீதத்தினர் இப்பழக்கம் மேற் கொண்டவர்கள் ஆவர். காரணம் தெரியாத பல தற்கொலைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.

எவ்வாறு கண்டுபிடிக்கலாம்

* அவர்களின் கர்ச்சீப்பில் வெண்ணிற/வேறு நிற கரை இருக்கிறதா, வாசனை வருகிறதா என கவனிக்கலாம். 

* பிள்ளைகளின் ஆடைகளில் எண்ணெய், பெயிண்ட் கரை இருப்பதன் மூலமாக, வாய் பகுதியை சுற்றி புள்ளிகள் கொப்பளங்கள் ஏற்பட்டிருந்தால்,  கடுமையான ஜலதோஷம் மற்றும் சுவாசத்தில் கெமிக்கல் வாசனை தெரிவதன் மூலமாகவும் கண்டு உணரலாம்.

இதற்கென்று எந்த ஒரு தனிப்பட்ட மருத்துவமும் இல்லை என்பது இதன் சோகம்.

ஒருவர் தவறான பழக்கத்தில் ஈடுபட காரணம் எதுவாக இருந்தாலும் வீட்டினரின் அன்பும் அக்கறையும் கவனிப்பும் இருந்தால் மட்டும்தான் சரி செய்யமுடியும். உங்கள் குழந்தை இப்பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்தால் முதலில் அவசரப்படாமல் உங்கள் குழந்தையை அமைதியாக அணுகுங்கள். ஆத்திரப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதோ, அடிப்பதோ கூடவே கூடாது. அவ்வாறு நடந்துக் கொண்டால் அவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து மேலும் சிக்கலாகிவிடக் கூடும், எச்சரிக்கை. ஒரு முறை நுகர்வது கூட மரணத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

போதைக்கு அடிமையாக வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும் போதை பொருளின் தன்மை ஒன்றே , அது தீயது அதை தேர்வு செய்த பாதையும் தவறே !!

என்ன செய்யப் போகிறோம் நாம் ??!! குறைந்தபட்சம் நம் வீட்டுப் பிள்ளைகளை மட்டும் கவனித்தால் கூட போதும் !!


இந்த போதைப் பொருளைப்  பற்றி எழுதி இதுவரை தெரியாதவர்களுக்கு தெரியவைத்து விடுவோமோ என்ற தயக்கத்திலேயே கடந்த மூன்று வருடமாக எழுதாமல் இருந்தேன். ஆனால் வெகு தாராளமாக இன்று பள்ளி கல்லூரிகளில் நடமாடுகிறது என்பதை அறிந்த பின்பே இதன் தீமைகளை பற்றி எழுதாமல் இருக்கக் கூடாது என்ற முடிவிற்கு வந்தேன். தயவு செய்து இப்பதிவை படித்தவர்கள் பிறருக்கும் பகிர்ந்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். நன்றி.

கௌசல்யா ...and Angelin ..

whitener பற்றிய தகவலை பல செய்தித்தளங்களில் இருந்து  எடுத்தேன் ..
reference from these websites 

http://timesofindia.indiatimes.com/life-style/people/Whitener-addiction-on-the-rise-among-teens/articleshow/36496491.cms
http://www.childlineindia.org.in/children-affected-by-substance-abuse.htm
http://smprap1989.blogspot.co.uk/2013/07/whitener-ink-addiction-contributed-to.html
http://timesofindia.indiatimes.com/city/indore/Partial-ban-on-whitener-sale-over-addiction-fears/articleshow/23207436.cms
http://www.facenfacts.com/NewsDetails/20091/children-of-a-lesser-god...-on-kolkatas-streets.htm
http://emedicine.medscape.com/article/818939-overview
http://www.nhtsa.gov/people/injury/research/job185drugs/toluene.htm